சென்னை:
திருச்சி மாவட்டம், குண்டூரைச் சேர்ந்தவர் வசந்தா (80). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்த நிலையில், வசந்தா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஹைதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வசந்தா ஹைதராபாத்தில் இருந்து விமான மூலம் சென்னை வந்தார். இதையடுத்து அவர் தாம்பரம் பேருந்து நிலையம் செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவில் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார்.
இதையடுத்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென குரோம்பேட்டை பச்சமலை நோக்கி சென்றுள்ளது. அப்போது ஆட்டோவில் இருந்த வசந்தா ஏன் வேறு எங்கோ கூட்டி செல்கிறீர்கள் என ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் பச்சமலை அருகே சென்றபோது வசந்தா கழுத்தில் அணிந்து இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா இது குறித்து தாம்பரம் காவல் நிலைய குற்ற பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.