திருநெல்வேலி:திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சார்ந்தவர் உதய தட்சாயினி (23). எம்.காம் பட்டதாரியான இவர், பாளையங்கோட்டை நம்பிக்கை நகர் பகுதியைச் சார்ந்த மதன் குமார் (28) என்பவரை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
மதன்குமார் திருநெல்வேலியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் பணியாற்றி வருகிறார். இவர் திராவிடர் தமிழர் கட்சியிலும் உறுப்பினராக உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டை விட்டு வெளியேறிய உதய தாட்சாயினி, காதலன் மதன்குமார் உடன் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்ததாக தெரிகிறது.
பெண்ணைக் காணவில்லை என குடும்பத்தினர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினர் கட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்களிடம் சரியான தகவல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
திருமணம் முடித்த பிறகு காவல் நிலையத்திற்கு வருவார்கள் எனக் கூறியுள்ளனர். இதற்கிடையில், நேற்று மாலை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு உதய தாட்சாயினியும், மதன்குமாரும் கட்சியினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் உள்பட பிற கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான தகவல் பெண் வீட்டாருக்கு கிடைக்க, நேற்று பிற்பகலில் பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்ட் அலுவலகம் வந்து பெண்ணை தங்களோடு அனுப்ப வேண்டுமெனக் கேட்டுள்ளனர்.