ஈரோடு:அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டு 5 நாள்கள் கூட நிறைவடையாத நிலையில், சத்தியமங்கலம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் என்ற இடத்தில், திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாயின் ஏர் வால்வில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் (Credits- ETV Bharat Tamil Nadu) இதில் வீணாக வெளியேறும் தண்ணீர் துளிகள் சாலையில் குறுக்கே விழுவதால், வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கனவாக இருந்தது அத்திக்கடவு - அவிநாசி திட்டம்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட இந்த திட்டம், பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதனை கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 32 ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 குளங்களுக்கு நிரப்பப்படும்.
வீணாக வெளியேறும் தண்ணீர்:திட்டம் தொடங்கப்பட்டு சில நாள்களைக் கூட தாண்டாத நிலையில், இன்று (புதன்கிழமை) ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி மற்றும் நம்பியூர் இடையில் உள்ள தண்ணீர்ப் பந்தல் என்ற இடத்தில் பதிக்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் குழாயின் ஏர் வால்வில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஏர் வால்வு வழியாக பீறிட்டு வெளியேறும் தண்ணீர் புகைமூட்டம் போல நம்பியூர் சாலையில் வீணாக வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு மறைப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்து:இதன் காரணமாக, அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், தண்ணீரில் வழுக்கி விழுந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் இருசக்கர வாகனங்களில் சென்ற இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக பதியப்பட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை.. டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக இருப்பது எப்படி?