சென்னை :கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூட்டுறவு நிறுவனங்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குறித்து அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு லட்சம் வரை கல்விக் கடன் வழங்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தனிமனித வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வியின் பங்கு மிக முக்கியமானது என்பதாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் உச்சவரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க நிபந்தனைகள் வழிமுறைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி,மத்தியக் கூட்டுறவு வங்கிகள்,நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள்,தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் ஆகியவற்றில் கடன் வழங்கலாம். கடன் வரம்பாக (Loan limit) ரூபாய் ஒரு இலட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கலாம்.
மேலும், ஒரு லட்சத்து 1 ரூபாய் முதல் 5,00,000 வரை 100% பிணையம் பெறப்பட வேண்டும். படிப்பிற்குண்டான டியூஷன் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் மற்றும் உணவு கட்டணம், ஆய்வகம் (laboratory) கட்டணம், புத்தக கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்து கடன் வழங்கப்படும்.
வட்டி விகிதம் (Interest rate):கடனுக்கான வட்டி விகிதத்தினை அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்புக் குழு மூலம் நிர்ணயம் செய்யப்படும். இணைப்புச் சங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை நிதியுதவி வழங்கும் வங்கி நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும், இணைப்புக் சங்கங்கள் (நகர கூட்டுறவு வங்கிகள் தவிர) இணைக்கப்பட்ட மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெற்று உறுப்பினர்களுக்கு இக்கடனை வழங்க வேண்டும்.
கடனை திருப்பி செலுத்தும் காலம் (Loan repayment period):கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.