தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் அண்ணாமலையின் யாத்திரைக்கு எதிர்ப்பு.. தன் கார் மீது முட்டை வீசிய அஸ்லம் பாஷா! - வாணியம்பாடி

Aslam Basha: தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா, வாணியம்பாடிக்கு அண்ணாமலை நடைபயணம் வந்தால், அவர் மீது முட்டை வீசப்படும் என தனது கார் மீது முட்டை வீசி எதிர்ப்பு தெரிவித்தார்.

Aslam Basha
திருப்பத்தூரில் அண்ணாமலை வருகையையொட்டி முட்டை வீசி எதிர்ப்பு தெரிவித்த அஸ்லம் பாஷா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 3:21 PM IST

திருப்பத்தூரில் அண்ணாமலை வருகையையொட்டி முட்டை வீசி எதிர்ப்பு தெரிவித்த அஸ்லம் பாஷா..!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இன்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று ஆன்லைன் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் ஒன்றைப் பதிவு செய்து உள்ளார்.

இந்த புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, வாணியம்பாடியில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ளக் கூடாது எனவும், அதை மீறி வாணியம்பாடியில் பாதயாத்திரை மேற்கொண்டால், அண்ணாமலை மீது முட்டை வீசி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அஸ்லம் பாஷா அவரது வீட்டிலிருந்து முட்டையுடன் சென்றபோது, அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அஸ்லம் பாஷா, தான் வைத்திருந்த முட்டையைத் தனது கார் மீது வீசி எதிர்ப்பு தெரிவித்தார்.

அஸ்லம் பாஷா மற்றும் காங்கிரஸ் கட்சியினரை வாணியம்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்திருப்பதால், வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அஸ்லம் பாஷா, “கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சி செய்கின்ற பாஜக அரசு, இந்தியா முழுவதும் கசப்பை பிழிந்து, வெறுப்பை உமிழ்ந்து வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்ட இந்த ஜனநாயக நாட்டிலே, வேற்றுமையைப் பிரித்து இன்று ஹிட்லராக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற நரேந்திர மோடி அரசு, இந்தியாவில் வெறுப்பை உமிழவிட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், இளம் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4,500 கி.மீ நடைபயணமாகச் சென்று அன்பை பொழிந்து வேற்றுமையில் ஒற்றுமையாக மக்களை இணைத்திருக்கிறார். அதேபோல், நடைபயணம் விடுபட்ட மாநிலங்களில் நேர்மையாக, உண்மையாக அனுமதி பெற்று, நடைபயணத்தை மேற்கொண்டபோது, சில பாஜக, ஆர்எஸ்எஸ் ஆளுகின்ற மாநிலத்தில், அவர்களுக்கு அனுமதி கொடுக்காமல் ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியினையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.

அதுமட்டுமின்றி, நேற்றைய முன்தினம் ராகுல் காந்தி வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். இந்த நிலையிலும் கூட ராகுல் காந்தி அன்பு, அகிம்சையால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என்ற நோக்கத்தில் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கும்போது, இப்படிப்பட்ட செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்திக்கு ஒரு நியாயம், அண்ணாமலைக்கு ஒரு நியாயமா? ராகுல் காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு அண்ணாமலை தகுதி இல்லாத நபர்.

என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள அண்ணாமலைக்கு, ராகுல் காந்தியின் வழி தெரிய வேண்டும். நான் புகார் கொடுத்தேன் அனுமதி கொடுக்கக்கூடாது என்று. ஆனால், போலீசார் எந்த வகையில் என்னை அழைத்து விசாரித்தார்கள், அண்ணாமலையை எந்த இடத்தில் விசாரித்தார்கள்?.

மேலும், போலீசார் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து, அண்ணாமலைக்கு மட்டும் அனுமதி கொடுத்து விட்டு, என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். என்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாமலை மீது முட்டை வீசி கண்டனத்தைத் தெரிவிக்க உள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:பிப்.12-இல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

ABOUT THE AUTHOR

...view details