சென்னை: கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியிலிருந்த புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் தாக்கினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், சென்னை தலைமை நிலைய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமுக முடிவு எட்டப்பட்ட நிலையில் போராட்டமானது கைவிடப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, மருத்துவமனைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்குரிய ஆணை மருத்துவ கல்வி இயக்குநரால் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடு; வியப்பில் அண்டை மாநிலங்கள் - அமைச்சர் ரகுபதி பேச்சு
- அதில் சுகாதாரப்பணியாளர் பாதுகாப்பிற்கான மாநிலச் சட்டம் மற்றும் பாரதிய நியாயசன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் தண்டனை விவரங்களுடன் அனைத்து மருத்துவமனை வளாகங்களின் உள்ளே பல தெளிவான இடங்களில் தமிழில் காட்சிப்படுத்தப்படும்.
- மூத்த மருத்துவர்கள். செவிலியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களை உள்ளடக்கிய மருத்துவமனை பாதுகாப்புக்குழு மற்றும் வன்முறை தடுப்புக்குழு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்படும்.
- மருத்துவமனையின் முக்கிய பகுதிகளுடன் தொடர்புடைய பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கான ஒழுங்குபடுத்தப்படும்.
- நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு பார்வையாளர் அனுமதி அட்டை வழங்கும் கொள்கை செயல்படுத்தப்படும்.
- மருத்துவமனையில் பாதுகாப்பாக நடமாடுவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செயல்படுத்தப்படும்.
- குடியிருப்புகள், விடுதிகள் மற்றும் இதர மருத்துவமனை வளாகங்களின் அனைத்துப் பகுதிகளிலும் சரியான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யப்படும்.
- இரவுநேரத்தில் அனைத்து மருத்துவமனை வளாகங்களிலும் வழக்கமான பாதுகாப்பு ரோந்து, அருகில் உள்ள காவல்நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காவல்நிலையத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல், போதிய காவலர்கள் பணியில் இருத்தல் ஆகியவை உறுதிப்படுத்தப்படும். மேலும், மருத்துவமனைகளில் உடனடியாக தேவையான பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும்.
- மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் ஆட்களைக் கொண்ட பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அறையையும் மருத்துவமனைகளில் அமைக்கப்படும்.
- மருத்துவமனையின் OP மற்றும் IP சுமையின்படி பொருத்தமான விவரக்குறிப்புகளுடன் லக்கேஜ் ஸ்கேனர்களை சில மருத்துவமனைகளில் சோதனை அடிப்படையில் நிறுவப்படும்.
- மருத்துவமனைகளின் நுழைவாயில்கள், அவசர அறைகளின் நுழைவிடங்கள் மற்றும் ICUகள் போன்ற அனைத்து முக்கியமான இடங்களிலும் உள்ள பாதுகாப்பு ஊழியர்களுக்கு பொருத்தமான எண்களில் பொருத்தமான விவரக் குறிப்புகளுடன் கையடக்க உலோக கண்டறிவு (Hand Metal Detectors) சில மருத்துவமனைகளில் சோதனை அடிப்படையில் வழங்கப்படும் என மருத்துவர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்