சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வானில் வட்டமடித்து கொண்டு இருந்தன.
இதையடுத்துச் சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடு பாதைகளிலும் மழை நீர் தேங்கியதால், விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் காலை முதல் இன்று மாலை வரை தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து மற்ற விமான சேவைகளும் குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தை இயக்க முடியாத் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இன்று மதியம் 12.30 மணி முதல் மாலை 7 மணி வரை மொத்தமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டது. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு முன் கூட்டியே வருகை தந்த பயணிகள் அனைவரும் தற்போது விமான நிலைய வளாகத்திற்கு உள்ளேயே இருக்கைகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.