நெல்லை: திருநெல்வேலிக்கு முதல்முறையாக வர உள்ள பிரதமர் மோடியை சிவனுக்கு இணையாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டருக்கு இந்து முன்னணி, காங்கிரஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாளையங்கோட்டையில் பாஜக சார்பில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பிரதமர் மோடி, நெல்லை பொதுக்கூட்டத்திற்கு வருகிறார்.
குறிப்பாக, முதல் முறையாகப் பிரதமர் மோடி நெல்லை மாவட்டத்திற்கு வர இருப்பதால் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும் பிரதமரை வரவேற்று மாநகரம் முழுவதும் பாஜகவினர் ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தெற்கு மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயதுரை பாண்டியன் சார்பில் பிரதமர் மோடியை சிவனுக்கு இணையாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மோடியை, சிவனுக்கு இணையாக சித்தரித்த வசனங்களை அச்சிட்டிருப்பது இந்து ஆர்வலர்கள் மற்றும் சிவபக்தர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.