மதுரை: கடும் கோடை வெயிலை சமாளிக்க மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி செய்து தருவது ரயில் பயணிகள் வசதிகளில் ஒரு முக்கிய அம்சமாகும்.
கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை வீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் வசதியை ரயில்வே அமைச்சகம் மறு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், கடும் கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ரயில் நிலையங்களில் குடிநீர் குழாய்கள், குளிர் குடிநீர் வசதி ஆகியவை சரியாக செயல்படுகிறதா என கண்காணிக்கவும், தேவைக்கேற்ப கூடுதலாக தண்ணீர் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும், தினந்தோறும் குடிநீர் வசதி பற்றி ஆய்வு செய்யவும் அரசு சாரா சேவை நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், சாரண, சாரணியர் படை ஆகியவற்றை பயன்படுத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க மண்டல ரயில்வேகளுக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குடிநீர் வழங்கவும், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் ரயில் நிலையங்களில் அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் உதவியுடன் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், குடிநீர் தேவை நிலவரம் குறித்து கண்கானிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.