தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வியாசர்பாடி வாசிக்கிறது' ராணுவ விஞ்ஞானி நிறுவிய 'கலாம்-சபா' நூலகம்.. மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைத்தார்!

சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு நிறுவிய ‘கலாம் - சபா’ நூலகம், வழிகாட்டி மையத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.

கலாம்-சபா' நூலகம்
கலாம்-சபா' நூலகம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 4:17 PM IST

சென்னை:சென்னை வியாசர்பாடியில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு நிறுவிய 'கலாம்-சபா' நூலகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை திறந்துவைத்தார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தோல் ஏற்றுமதி குழுமத்தின் செயல் தலைவர் செல்வம், தமிழக காவல்துறை ஐஜி பா. சாமுண்டீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டில்லிபாபு கூறியதாவது,"வியாசர்பாடி பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் 'கலாம் சபா' செயல்படும்.

டில்லிபாபு மற்றும் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

மேலும் மாணவர்கள் தங்களுடைய பொது அறிவு மற்றும் அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான நூலகமாகவும் ஒரு வழிகாட்டி மையமாகவும் இந்த மையம் இருக்கும். பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு எந்த மாதிரியான வேலை வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்தும் தெளிவுபடுத்தும் வகையிலும் இங்கு வழிகாட்டி முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த அதிகாரிகளை நேரடியாக நம் கலாம் மையத்திற்கு வரவழைத்து மாணவர்களுக்கு வழிகாட்டும் சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,"இங்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் தனித்தனி திறமைகளை ஆராய்ந்து அவர்களை அந்த துறையில் திறம்பட செயல்பட வைக்கவும், தேவைப்படும்போது அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இதையும் படிங்க:19 ஆயிரம் புதிய ஆசிரியர்களை கொண்டு வர முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

இது வெறும் வாசிப்பு கூடமாக மட்டுமில்லாமல் புதிய சிந்தனைகளுக்கான உத்வேக மையமாகவும் அனைவரும் பயன்படும் வகையிலான வழிகாட்டு மையமாகவும் செயல்படும்" என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, "இந்நிகழ்ச்சியில் வியாசர்பாடி வாசிக்கிறது என நிகழ்ச்சி தொடங்கினார்கள். இதில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 'கலாம் சபா' நூலக வழிகாட்டி மையத்தை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவரவர் தங்கள் பகுதிகளில் இது போன்ற நூலகங்களை திறந்து அப்பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

'ஊர் கூடி தேர் இழுப்பார்கள்' என்பது போல தான் வளர்ந்த பகுதியை தன்னை போன்று எடுத்து செல்ல நினைப்பது மிகவும் சிறப்பான செயலாகும். இதனை அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details