மதுரை:மதுரை மாநகரில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் தாய் இறந்துவிட்ட தான் காரணமாக, தந்தையும் வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் குழந்தைகள் இருவரும் தாயின் அக்கா(பெரியம்மா) வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுமியின் சகோதரர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுமி மட்டும் பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை கழிவறைக்குள் சென்ற சிறுமி, நெடுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை என கூறி அச்சிறுமியின் வளர்ப்பு பெற்றோர் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உடற்கூறாய்வின் முடிவுகளில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை வளர்த்து வந்த பெரியம்மா மற்றும் பெரியப்பா ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.