கோவை: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (27). இவர் கொச்சியில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அஸ்லாம் சித்திக் கடந்த 13 ஆம் தேதி தனது நண்பர் சார்லஸ் உள்ளிட்ட நான்கு பேருடன் கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள் வாங்க பெங்களூருக்கு சென்றள்ளார்.
பின்னர் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கோவை வழியாக கேரளா செல்வதற்காக தனது காரில் வந்துள்ளார். அப்போது மதுக்கரை வாளையாறு நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு இனோவா கார்களில் வந்த மர்ம கும்பல் அஸ்லாம் சித்திக் வந்த காரை மறித்து நின்றனர்.
பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து காரை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட அஸ்லாம் சித்திக் உடனடியாக அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு காரை எடுத்து தப்பிச் சென்றார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருப்பதைக் கண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதையடுத்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காரை கொள்ளையடிக்க முயன்ற கேரளா மாநிலத்தை சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகிய நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர்.