சென்னை:கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செம்பியம் தனிப்படை போலீசார், இதுவரை 23 நபர்களை கைது செய்துள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபர்களான பொண்ணை பாலு, அருள், ராமு, ஹரிகரன், ஹரிதரன் உள்ளிட்ட சிலரை மூன்று முறை போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், வட சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சி முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவரது தந்தையும், வேலூர் சிறையில் இருக்கும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், வேலூர் சிறையில் இருக்கும் வட சென்னை ரவுடி நாகேந்திரனை வேலூர் சிறையில் வைத்தே செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதற்கான ஆவணங்களை வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து நாகேந்திரனை கைது செய்துள்ளனர். இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரவுடி நாகேந்திரனை போலீஸ் வாகனத்தில் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாகேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், காவல்துறை நாகேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஏழு நாட்கள் கேட்டிருந்த நிலையில், இன்று நீதிபதி நாகேந்திரனை காவல்துறை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ள ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான திட்டத்தை சிறையில் இருந்து கொண்டே, அவரின் ஆதரவாளர்களுடன் கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், அவரது மகன் அஸ்வத்தாமன் கொலை குற்றவாளிகளுக்கு பண உதவி செய்தும், பிரபல ரவுடி சம்போ செந்தில் உடன் தொடர்பில் இருந்துள்ளது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த ரவுடி தரப்பிற்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் போட்டிகள் காரணமாக முன்விரோதம் இருந்திருக்கலாம், அதனால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; நாகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற போலீசார்!