சென்னை:சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ், அவரது சகோதரர் பொன்னை பாலு உட்பட பல்வேறு ரவுடிகள் என மொத்தம் இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை மாறி, மாறி காவலில் எடுத்து செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டும் அல்லாது, கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசிங் ராஜாவை தீவிரமாக தேடி வருவதாகவும், அவர் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் சுவர் ஒட்டிகளை ஒட்டியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று (செப் 22) காலை ஆந்திர மாநிலம், கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியது. கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று சீசிங் ராஜா கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக சீசிங் ராஜாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கத்தி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள அக்கறை கெனல் கிராஸ் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்ய சீசீங் ராஜாவை போலீசார் அழைத்து சென்றதாகவும், அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து போலீசாரை வெட்ட சீசிங்கு ராஜா முயற்சி செய்ததாகவும் இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும் அப்போது சம்பவ இடத்திலேயே ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ரவுடி சீசிங் ராஜாவின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.