அரியலூர்:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து, அதற்கான தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியானது. இதில் மொத்தமாக 7,60,606 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அஸ்விதா என்ற மாணவி 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்து சாதனை பிடித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி கிராமத்தில் ஹோட்டல் நடத்தி வருபவர் கொண்டல்ராஜ் - சீத்தம்மாள் தம்பதி. இவர்களது மகள் அஸ்விதா. இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கோகிலாம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயோ-கணிதம் (Bio-Maths) பாடப்பிரிவு எடுத்து பயின்றார்.