தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டங்ஸ்டன் திட்டம் ரத்துன்னு அண்ணாமலை சொன்னா எப்படி? அமைச்சர்ல சொல்லணும்! - அரிட்டாபட்டி மக்கள் கேள்வி - TUNGSTEN PROJECT ARITTAPATTI

டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு செய்யாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிடுவது ஏமாற்றம் அளிப்பதாக அரிட்டாபட்டி கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரிட்டாபட்டி கிராமத்தினர், அண்ணாமலை கோப்புப்படம்
அரிட்டாபட்டி கிராமத்தினர், அண்ணாமலை கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2025, 7:21 PM IST

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. அதனையொட்டி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில், மேலூரரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் என திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டங்ஸ்டன் கனிம சுரங்கம்

இந்நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக திரண்டு வந்து மதுரையை ஸ்தம்பிக்க வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டங்கள் பல்வேறு வகையிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு தொல்லியல் மண்டலமாகவும், பெரியாறு பாசனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டங்களில் வலியுறுத்தி வந்தனர்.

அரிட்டாபட்டி கிராமத்தினர் (credit - ETV Bharat Tamil Nadu)

தீவிரமான போராட்டம்

முன்னதாக டிசம்பர் 9-ம் தேதி தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது. டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தமிழக அரசின் தீர்மானம் சற்று ஆறுதலை தந்தாலும், இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறு வரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு போராட்டக்காரர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், போராட்டம் மேலும் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.

அரிட்டாபட்டி கிராமத்தினர் (credit - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ய நடவடிக்கை... விவசாயிகளிடம் மத்திய அமைச்சர் உறுதி!

இந்நிலையில் தமிழக பாஜக சார்பாக, மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய குழுவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், இன்று (ஜன.22) புதுடெல்லியில் மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியின் அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.

அரிட்டாபட்டி கிராமத்தினர் (credit - ETV Bharat Tamil Nadu)

டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் விளக்கி கூறினர். இந்நிலையில், அமைச்சர் கிஷண் ரெட்டியுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இந்த திட்டம் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

ஏமாற்றத்தை அளித்துள்ளது

இதனை அடுத்து அரிட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் மற்றும் சுந்தரேசன் ஆகியோர் கூறுகையில், ''எங்கள் சார்பாக புதுடெல்லிக்கு சென்ற எங்களது விவசாய சகோதரர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு முழுமையாக செவி சாய்க்கும் என நம்பினோம். ஆகையால் இன்று காலை முதலே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தோம். முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பினோம்.

ஆனால், அமைச்சரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம் ரத்து செய்யப்படும் என பேட்டியளித்துள்ளார். இதனை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி அறிவித்திருந்தால் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். மாறாக அண்ணாமலை அறிவித்திருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், நாளை பிரதமர் மோடி எங்களது பிரதிநிதிகளை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாங்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்'' என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details