சென்னை: மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு (Hindustan Zinc Limited) வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க (Tungsten mining) உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மேலூர், சுருளிப்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர் பட்டி, தெற்கு தெரு, வெள்ளாளப்பட்டி உள்ளடக்கிய கிராமங்களில், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, பிரதமர் அவர்கள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்திட வேண்டும்.
இதையும் படிங்க:"அரிட்டாபட்டி கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்"-மத்திய அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்!
மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்த நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.