ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தொல்லியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதுமட்டும் அல்லாது இந்த நிகழ்ச்சியில் நடந்த தொல் பொருட்கள் கண்காட்சியில், ராமநாதபுரத்தில் கிடைத்த பழைய, புதிய மற்றும் நுண் கற்காலக் கருவிகள்; கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள்; ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள்; இரும்புத்தாதுக்கள்; இரும்புக் கழிவுகள்; வட்டச் சில்லுகள்; பானைக் குறியீடுகள்; கல்வெட்டுகளின் மைப்படிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், பாரம்பரியத்தை அறிய உதவும் தொல்லியல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள் என்ற இரண்டு தலைப்புகளில் மாணவர்களிடம், வே.ராஜகுரு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திருவாடானைப் பகுதியில் வணிகர், வணிகக்குழு, அறுநூற்றுவர் என்ற வணிகக்குழு, பாதுகாவல் வீரர்கள் இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், அதிகளவு நெல் விளைச்சல், விவசாயத்துக்காக பாண்டியர்கள் மற்றும் சேதுபதி மன்னர்கள் உருவாக்கிய கண்மாய்கள், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, இயற்கைத் துறைமுகங்கள், அதிகளவிலான வணிகப் பாதைகள், பாதுகாப்பு ஆகிய பல காரணங்களால் ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானைப் பகுதி திகழ்ந்துள்ளதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.