மதுரை:மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கண் புற்றுநோய் பிரிவின் தலைவர் உஷா கிம், அமெரிக்க கண் மருத்துவ சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கண் மருத்துவத்திற்கான சிறந்த மருத்துவர் விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அமெரிக்க கண் மருத்துவ சங்கத்தின் (American Academy of Ophthalmology - AAO) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளிலுள்ள கண் மருத்துவர்களின் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவ வல்லுநர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அமெரிக்கா, இல்லினாய்ஸ், சிகாகோவில் உள்ள மெக்கார்மிக் பிளேஸில் ஆண்டு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 2 ஆயிரத்து 130 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் 72 மட்டுமே தகுதிக்குரியனவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அதில் மருத்துவர்உஷா கிம்வழங்கிய ஆய்வுக் கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, அக்கட்டுரை முதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு ஏற்படும் கண் புற்றுநோய், குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை, திறமை மிகு மருத்துவம் மற்றும் செயல்பாடுகளை மருத்துவர் உஷா கிம் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் மருத்துவர் உஷா கிம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண் மருத்துவத்துறை சார்ந்து பணியாற்றி வருகிறார். அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவர் வில்லியம் பி.ஸ்டீவர்ட் வழிகாட்டுதலின் கீழ், கண் அறுவை சிகிச்சை, கண் புற்றுநோய்த் துறையில் சிறப்பு பயிற்சி பெற்றவர்.