சென்னை:அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நேரடி ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வில், கல்லூரிகளின் பேராசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித்தகுதி மற்றும் மாணவர்களுக்கான செய்முறை பரிசோதனைக் கூடம் போன்றவற்றின் உட்கட்டமைப்பு பொறுத்தே அந்தந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது.
ஒவ்வொரு படிப்புக்கும் கல்லூரியில் இருக்க வேண்டிய கட்டமைப்பை ஏஐடிசிஇ வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளைக் கொண்டே அண்ணா பல்கலைக்கழகம் நேரடி ஆய்வு மேற்கொள்கிறது. அந்த கட்டமைப்பு பொறுத்தே கல்லூரிகளில், பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்படும்.
ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராக பணிபுரிய முடியாது. அப்படி பணிபுரிந்தால் மோசடி என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் கூறுகிறது. சிறப்பு பேராசிரியர்கள், முழுநேர பேராசிரியர்கள் அல்ல.
ஒரு கல்லூரியில் பணிபுரியும் முழுநேர பேராசிரியர் மற்றும் முனைவர்கள் எண்ணிக்கை பொறுத்தே அந்த கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும், அந்த பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.எச்.டி எனப்படும் முனைவர் படிப்பு முடித்தவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் இத்தகைய முனைவர் பட்டம் பெற்றோர் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதால், ஒரே பேராசிரியரின் சான்றிதழை வைத்து பல்வேறு கல்லூரிகள் கணக்கு காண்பிக்கின்றன. இவர்கள் ஒரு சில வகுப்புகளை எடுக்கும் வகையில் சிறப்பு பேராசிரியராக பல கல்லூரிகளுக்கு சென்று வந்தாலும், இவர்களை முழு நேர போராசிரியராக கருத முடியாது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, “தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், நேற்று 9 கல்லூரிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 433 கல்லூரிகளில் 2.32 லட்சம் மாணவர்களை சேர்க்கை நடைபெற உள்ளது. அதில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு தற்போது கலந்தாய்வு நடைபெறுகிறது.