சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்சிசி) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர்.
கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது மாணவிக்கு கடந்த 9ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநரான காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் பாலியல் தொல்லை செய்துள்ளார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் முதல்வர், சமூக அறிவியல் ஆசிரியர், தாளாளர், குற்றம் சுமத்தப்பட்ட சிவராமன் உட்பட 5 என்சிசி பயிற்றுநர்களை போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனுமதி இல்லாமல் போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.