திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பில் நெல்லை பொருநை இலக்கியத் திருவிழா இன்று(ஜன.30) தொடங்கியது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இலக்கியத் திருவிழாவைத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னிலன் உட்பட பல எழுத்தாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, "இந்தியாவிலேயே அதிக சாகித்திய அகாதமி விருது பெற்ற பகுதியாக நெல்லை சீமை உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலை, இலக்கியம், பண்பாடு மீது மிகப்பெரிய பற்று கொண்டிருந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி எடுத்த முயற்சியால் தான் தமிழ்மொழி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, இல்லாவிட்டால் பிறமொழி நம்மை ஆண்டு கொண்டிருக்கும். வெளிநாட்டில் ஆட்சி மொழியாக இருக்கும் ஒரே மொழி தமிழ்மொழி தான். சிங்கப்பூர், மலேசியா உள்பட ஏழு நாடுகளில் ஆட்சி மொழியாகத் தமிழ் மொழி இருக்கிறது. இவ்வளவு சிறப்புப் பெற்ற தமிழ்மொழி இந்திய அளவில் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
உலகளவில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டியது தமிழ் மொழி. இந்தியாவில் ஆட்சி மொழியாகத் தமிழ்மொழி இருக்க வேண்டும் என்ற உரிமைக் குரலைத் தொடர்ந்து நாம் கொடுக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்மொழிக்குத் தான் முதன் முதலில் செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. மிகக் குறைந்த பேச்சு வழக்கில் உள்ள சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு 2ஆயிரம் கோடி ரூபாயை வளர்ச்சி நிதியாகக் கொடுக்கிறது. ஆனால் 10 கோடி பேர் பேசும் தமிழ்மொழிக்கு வெறும் 40 கோடி அல்லது 50 கோடி ரூபாய் தான் தருகின்றனர்.