கரூர்: கரூரில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கேரளாவில் வைத்து கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த உறவினர் பிரவீன் என்பவரையும் கைது செய்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதித்துறை எண் 1ல் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, நீதிபதி பரத்குமார் ஜூலை 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று வாங்கல் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகார் அடிப்படையில், ஜூன் 22ஆம் தேதி பதிவு செய்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய சகோதரர் சேகர் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, இன்று கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விஜயபாஸ்கரை ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.