சென்னை: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவை (ராஜ்யசபா) தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சியினர் (காங்கிரஸ்), அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "விமான நிலையங்களில் செய்திகளை சந்திக்க மாட்டேன் என முன்பு கூறியிருந்தேன். தற்போது திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் செய்தியாளர்கள் கேட்பதால் பேசுகிறேன்.
சென்னையில் அலுவலகத்தில் சந்திப்பதால் விமான நிலையத்தில் தவிர்க்கிறேன். பத்திரிகையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. சில நேரங்களில் விமானத்தில் ஏறி இறங்கும் போது அப்டேட் இருக்காது. அதனால், சிலவற்றை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றார்.
மேலும், மாநிலங்களவை தலைவர் மீது எதிர்க் கட்சியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல். மாநிலங்களவை தலைவர் ஒரு விவசாயியின் மகன், நிறையப் படித்தவர். மேற்கு வங்கத்தில் ஆளுநராக சிறப்பாக பணியாற்றியவர். நாடாளுமன்றத்தில் அவர் பல முறை உதாசினப்படுத்தப் பட்டுள்ளார். ராகுல்காந்தியே கேலி செய்யும் விதமாக ஒரு முறை மாநிலங்களவை தலைவரை பேசியுள்ளார்," என அண்ணாமலை குறிப்பிட்டுப் பேசினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி (ETV Bharat Tamil Nadu) தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 73 ஆண்டுகளாக இல்லாத ஒரு நடைமுறையை கொண்டு வந்துள்ளார்கள். இதுவும் தோற்கடிக்கப்படும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், எம்.பிக்களுக்கும் மனசாட்சி இருக்கிறது. மனசாட்சியுடன் பார்த்தால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை என்று தெரியும்," எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் ரோஜா பூக்களுடன் கவனம் ஈர்த்த எதிர்கட்சி உறுப்பினர்கள்...நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை!
தற்போது மாநிலங்களவையின் தலைவராக துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் செயல்பட்டு வருகிறார். குளிர்காலக் கூட்டத்தொடரின் 12ஆவது நாளான நேற்று (டிசம்பர் 11) நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் மூவர்ண கொடி, ரோஜாப்பூக்களை கையில் ஏந்தியபடி ஆளும் பாஜக எம்பிக்களை வாழ்த்துவதாக விநோத முறையில் போராட்டத்தை முன்னெடுத்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.