தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அணையப்போகிற விளக்கு பிரகாசமாக தான் எரியும்" - ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை! - Annamalai

Annamalai: “அதிமுக அணையப்போகிற விளக்கு, அது பிரகாசமாக தான் எரியும்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 10:17 PM IST

Updated : May 30, 2024, 10:52 PM IST

அண்ணாமலை மற்றும் ஜெயக்குமார்
அண்ணாமலை மற்றும் ஜெயக்குமார் (Credits: ETV Bharat Tamilnadu)

சிவகங்கை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை சத்யகிரீஸ்வரர் கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் மற்றும் கோட்டை பைரவர் ஆகிய கோயில்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது மனைவியுடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையின் பேட்டி (Credits: ETV Bharat Tamilnadu)

இதற்காக வாரணாசியிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அமித்ஷா, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்து இறங்கினார்.

இதனைத் தொடர்ந்து, சாலை மார்கமாக சுமார் 9 கிலோமீட்டர் பயணித்து திருமயத்திற்குச் சென்று, அங்குள்ள கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதையடுத்து, கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா தனது மனைவியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், மீண்டும் செட்டிநாடு கால்நடை பண்ணைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்றடைந்தார்.

இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பிரதமர் நரேந்திர மோடி குமரி விவேகானந்தர் பாறையில் இன்று முதல் வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை சுமார் 48 மணி நேரம் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

விவேகானந்தர் மண்டபம் என்பது தனியார் அமைப்பு நடத்தக்கூடியது. அந்த தனியார் நிறுவனம் அழைத்ததால் பிரதமர் வந்திருக்கிறார். சொந்த நிகழ்வாக சென்றிருக்கிறார். எனவே, இதற்கும், கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதனால்தான் அரசும் தங்களது அனுமதி தேவையில்லை என கூறியிருக்கின்றனர்” என தெரிவித்தார்.

தொடர்ந்து ஜெயக்குமார் பாஜக குறித்து விமர்சித்தது பற்றி கேட்டதற்கு, "இந்துத்துவா என்பது யாருக்கும் எதிரி கிடையாது. இந்து என்ற பெயரில் இஸ்லாமியரையும், கிறிஸ்துவரையும் வெறுக்கிறார் என்றால், அவர் உண்மையான இந்து கிடையாது. இன்றைக்கு மக்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் நடக்கிறது. அதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேபோல், ஜூன் 4ஆம் தேதி அதிமுக என்ற கட்சி எங்கிருக்கப் போகிறது என்பதை நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம். அணையப்போகிற விளக்கு பிரகாசமாகத்தான் எரியும். எனவே, எந்த கட்சி இருக்கும், எது காணாமல் போகும் என்பது ஜூன் 4ஆம் தேதி முடிவிற்குப் பின் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்து உள்ளோம். முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்" என்றார்.

இதையும் படிங்க:குமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி! - Narendra Modi In Kanyakumari

Last Updated : May 30, 2024, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details