ஈரோடு: ஈரோட்டில் வருங்கால தலைமுறையினர் தொழில் முனைவோர் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. இதனை ஜிஎஸ்டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கணிக்க முடியும். 2024ம் ஆண்டு காலாண்டு பகுதியில் மஹாஷ்டிரா 15%, கர்நாடகா 9% ஆகிய மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு 3.3% மட்டுமே உள்ளது.
திமுக அரசு இதனை கவனிக்க வேண்டும். தமிழ்நாடு ஜிஎஸ்டி மாநில வருவாய் மைனஸ் பாயிண்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது. அப்படி என்றால் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மேலும், தொழில் முனைவோருக்கு போதுமான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும்.
மத்திய பிரதேச முதலமைச்சர் வந்த போது நான் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. கோவையில் தனியார் ஹோட்டலில் தொழில் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொழில் முனைவோர் எங்கே சலுகை கிடைக்கிறதோ அங்கு செல்வார்கள். நாம் மற்ற மாநிலத்தை பார்த்து பிரம்மிப்பு அடையும் வகையில் தான் தமிழகத்தின் நிலை உள்ளது. தமிழகத்தில் இருந்து மற்ற தொழில் முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் முனைவோர் முதலமைச்சரை நேரடியாக பார்க்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வங்காள தேசத்தில் உள்ள பிரச்னையை பயன்படுத்தி தொழில் முனைவோரை தமிழகம் நோக்கி அழைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தல்: தமிழக பாஜக வரும் 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்காக திருப்பூரில் நாளை முதல் கூட்டம் தொடங்க உள்ளது. திமுகவில் 40ஆண்டுகளுக்கு தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர் போன்று பாஜகவில் இல்லை. பாஜக கட்சி தலைவர் இல்லாத போதும் மற்றவர்கள் தலைவர்கள் கட்சி பணிகளை கவனிப்பார்கள். பாஜகவின் தற்போதைய கூட்டணி ஆட்சியை முன்வைத்ததால் தான் கூட்டணி அமைத்தோம்.
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி என பேச்சு எழுந்துள்ளது. கூட்டணிக்குள் யார் வந்தாலும் கூட்டணி ஆட்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை. 2026ம் ஆண்டு நான்குமுனை போட்டி இருக்கும் எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள் வெற்றி பெற முடியும்.
நல்லவர்களும் 2026ம் ஆண்டு தேர்தலில் வரும்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். அப்போது தான் மக்கள் யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்ற வாய்ப்பாக இருக்கும். தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் 5 வருடத்திற்கு ஒரு முறை வாக்கு சதவிகிதம் உயரவில்லை என்றால் கட்சி எங்காவது தவறு செய்கிறது என்று தான் அர்த்தம். அதனால் பாஜக வளர்ந்து இருக்கிறது.