சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ஐந்து ரூபாய்க்கு குறைப்பதாகவும், சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் வரைக்கும் குறைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வரை, அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்முதலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு, இதுகுறித்து கேட்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் நல்ல அரசியல்வாதி. எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மத்திய அரசை குறைகூறி வருகிறார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால், அவர் நீதிமன்றத்திற்கு செல்லலாமே. இச்சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது. எந்த விதத்திலும் எதிரானது அல்ல. முதலமைச்சர் ஸ்டாலின் செய்தித்தாள் கூட படிப்பதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிஏஏ என்றால் என்ன? என்பது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு 100 சதவிகித உரிமை உள்ளது. இதில் மாநில அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 35 பக்கங்கள் அடங்கிய குறிப்பை, மாநில அரசுகள் படித்து முதலில் புரிந்து கொள்ளுங்கள்.