கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற பகுதியில் காங்கேயம் பாளையம், காடம்பாடி, செங்கத்துறை, சாமளாபுரம் கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சூலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாய பெருமக்களும் தொழில் செய்யக்கூடிய மக்களும் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியாக உள்ளது.
பிரதமர் 400 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமரும் பொழுது நாம் அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம் முன்னால் உள்ள கேள்வி. தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி இருக்கின்றனர். பீக்ஹவர் கட்டணம், நிலை கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டு உள்ளது.15 முதல் 55 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வு சோலார் கொண்டு வருவது மட்டுமே.
மத்திய அரசில் மீண்டும் பாஜக அமர்ந்தவுடன் பவர் டெக்ஸ் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டு வரப்படும். அதன் மூலம் விசைத்தறிகளுக்கு அனைத்தும் சோலார் கொண்டு வந்து பயன்படுத்தப்படும். கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 4 ஆயிரத்து 800 மாணவர்கள் படிக்கும் வகையில் 4 நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவோம். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.
அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் சோமனூர் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். மத்திய அரசு சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டு வரப்படும். அதன் மூலம் ஜவுளி ஏற்றுமதி வளாகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி பூங்காவை அமைப்பதை மத்திய அரசால் மட்டுமே செய்ய முடியும். நொய்யல் ஆறு பக்கத்திலேயே இருக்கிறது. இதை சீரமைக்க 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணத்தைச் சாப்பிடுவதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.