சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார். தனிப்பட்ட முறையில் என்னையும் விமர்சித்து பேசி உள்ளார். உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை. எந்த கேள்வி கணை எழுப்பப்பட்டாலும், அதற்கு அவ்வப்போது பதில் சொல்லி பழக்கப்பட்டவர்கள் நாங்கள். நேற்றைய தினம் அவர், தான் ஏதோ உத்தம புத்திரன் போல பேட்டி அளித்து இருக்கிறார்.
நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் தன்னை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்தது போல பேசி இருக்கிறார். உண்மையை மறைக்காமல் அவர் பேட்டி அளித்திருக்க வேண்டும். உண்மை நிலவரம் என்னவென்றால், அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அவருடைய சம்பந்திக்கும் மற்றவர்களுக்கும் முறைகேடாக நெடுஞ்சாலை துறையில் டெண்டர் அளித்ததில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது எனவும், விசாரிக்க வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்பு துறையில் நான் புகார் அளித்தேன்.
ஆனால் அவர்கள் விசாரிக்காத காரணத்தினால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அதில் புகார் கொடுத்தும் விசாரிக்கவில்லை என சொன்னவுடன் நீதிமன்றத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டனர். இதில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் கேட்டதெல்லாம், லஞ்ச ஒழிப்பு துறை விசாாரிக்காததால், தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட special investigation team மூலம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
அப்போதைய அரசுத் தரப்பில் பதில் மனு போட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் சிபிஐ விசாரணையை நீதிமன்றமே தான் பிறப்பித்தது. ஆகையால், இந்த வழக்கில் அன்றும் சிபிஐ கேட்கவில்லை, இன்றும் கேட்கவில்லை. ஏனெனில், சிபிஐ விசாரணை என்றால் என்னவென்று எங்களுக்கு தெரியும். நான் வழக்கை வாபஸ் பெற்றேன் என எடப்பாடி பழனிசாமி பச்சைப்பொய் பேசுகிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணையை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதல் துவக்க உத்தரவிடுகிறது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி இதில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறுகிறார். இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், இன்று பச்சை பொய் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.
பின்பு கடந்த 2022ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை வருகிறது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. ஏற்கனவே விசாரணை சரியில்லை என்பதால், மாநில காவல்துறை சார்பாக விசாரணை துவங்கி நடைபெற்றது.
இதன் காரணமாக ஒரே வழக்குக்கு இரண்டு விசாரணை வேண்டாம் என்ற அடிப்படையில் நான் அளித்த மனுவை திரும்பப் பெற்றேன். இதற்காக டான்சி வழக்கின் போக்கை உதாரணமாக விளக்கிய ஆர்.எஸ்.பாரதி, இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். டான்சி வழக்கை போல், இந்த வழக்கிலும் நடைபெற்றதை எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வழக்கில் நான் மனுவை திரும்ப பெற்ற போதிலும் கீழ் நீதிமன்றம் விசாரிக்கட்டும். முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் தரப்பில் முடித்து வைத்தார்கள். அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையில் இருதரப்பு வாதங்களை கேட்ட பின்பு, காவல் துறை விசாரணை முறையாக நடைபெற்றது என அவரை விடுவித்தது. இருப்பினும் அதில் மற்றொரு உத்தரவையும் நீதிபதி பிறப்பித்தார்.