தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அண்ணாமலை ராஜினாமா செய்யணும்'.. பாஜகவில் இருந்தே எழும் குரல்கள்.. சீனியர்ஸ் அப்செட்! - k annamalai

annamalai bjp: அதிமுகவுடன் கூட்டணி எப்போதுமே இல்லை என்று தெரிவித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சொந்த கட்சியில் இருந்தே விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளன.

annamalai
annamalai (Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 6:43 PM IST

சென்னை: 18 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியான நிலையில், பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும், பாஜகவுக்கு ஓரிடத்தில்கூட வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் 9 தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 3 தொகுதிகளில் அதன் கூட்டணியில் போட்டியிட்ட பிற வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

சூடு கிளப்பிய அண்ணாமலை: இந்நிலையில் கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக இருந்திருந்தால் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என தெரிவித்திருந்தார், அதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, தான் தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், முன்னாள் தெலுங்கானா ஆளுநரும் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் அதிமுக பாஜக கூட்டணி இருந்திருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் என்பது எதார்த்தமான உண்மை என்றும் திமுக கூட்டணி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்காது என பேசினார். மேலும் 2026 அதிமுக பாஜக இடையே கூட்டணி உருவாகுமா இல்லையா என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

கூட்டணி பிளவால் தோல்வி: அதேபோல் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜகவின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், அதிமுக பாஜக இணைந்து போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். பிரிந்து போட்டியிட்டதால் தான் வாக்குகள் சிதறியுள்ளது, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்து இருந்தால் இந்தத் தேர்தலில் திமுக காணாமல் போயிருக்கும் என தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்வதுதான் தார்மீகம்: மேலும், தமிழக பாஜக அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் கல்யாண ராமன் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை அண்ணாமலை மீது வைத்துள்ளார். மேலும் தமிழிசை சௌந்தரராஜன் எஸ்.பி.வேலுமணி கூறியது சரியே என்றும் கடந்த 2014 தேர்தலை காட்டிலும் இந்த முறை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது டெபாசிட் இழந்த தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல் தோல்வியை அடுத்து தார்மீக அடிப்படையில் அண்ணாமலை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ராஜினாமா செய்வது போன்று நடிக்கவாவது செய்ய வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணனுடன் தொலைபேசியில் பேசிய அவர், பாஜகவில் உட்கட்சி தகவல் தொடர்பு சுத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

டெல்லி என்ன செய்யும்?: இப்படி ஒருவர் பின் ஒருவராக அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அகில இந்திய பாஜக மத்தியில் அமைச்சரவை ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. டெல்லி பரபரப்பு அடங்கிய பின்னர் தமிழ்நாட்டு விவகாரம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கொங்கு மண்டலத்தில் சரிந்த அதிமுக கோட்டை.. இதுதான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details