கோயம்புத்தூர்:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சரவணம்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வரவுள்ளார். நாளை மாலை மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் ரோடு ஷோ, வாகனப் பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலை 6 மணிக்கு மேல் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மோடி பரப்புரை:அதனைத் தொடர்ந்து, இரவு சென்னையில் தங்கும் பிரதமர், மறுநாள் காலை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தருமபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அன்புமணி மற்றும் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகத்தையும் ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் வரும் பிரதமர், மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி, கோயம்புத்தூர், மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்கிறார்.
நயினார் நாகேந்திரனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை: மீண்டும் 12ஆம் தேதிக்குப் பின்னர், பிரதமர் தமிழ்நாடு வரவுள்ளார். அப்போது அவர் சென்றிடாத தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பரப்பரை மேற்கொள்ள உள்ளார். திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தொடர்புபடுத்தி நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சதி வேலை செய்து, தனது பெயர் குறிப்பிட்டுள்ளனர். பணத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்குப் பிறகு அந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை.
தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் திமுக அனைத்து தவறுகளையும் செய்து விட்டு மற்றவர்களை திருடன் என்கிறது. உண்மையான திருடன் திமுக தான். ஆர்.எஸ்.பாரதி பேசுவதிலேயே தெரிகிறது. கோயம்புத்தூரில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு திமுக தங்கத்தோடும், 2 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வருகிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக ஆர்.எஸ்.பாரதி திருடன் திருடன் என பேசி வருகிறார்.
சர்வதேச மைதானங்கள் தேவை:பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒவ்வொரு பஞ்சாயத்தில் உள்ள தாய் கிராமத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அடிப்படை விளையாட்டு உபகரணங்களும் மைதான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு சர்வதேச மைதானங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அணையப் போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும்:ஆனால், கோவையில் தரமான சாலைகள் இல்லை. சரியாக குப்பைத் தரம் பிரித்து பராமரிப்பது இல்லை. நான்காயிரம் கோடி மதிப்பீட்டில் சர்வதேச மைதானம் என கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் கூறியுள்ளார். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்” என்றார். அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் கருத்து குறித்து பதில் அளித்தவர், அணையப் போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும். இன்னும் 40 நாட்களில் யார் காணாமல் போவார்கள் என்பது தெரிந்துவிடும் என்றார்.
கமல் சுயநினைவோடு தான் இருக்கிறாரா?நாக்பூர் இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்படும் என்ற கமலின் கருத்துக்கு பதில் அளித்தவர், “கமலஹாசன் மூளைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுயநினைவோடு தான் இருக்கிறாரா என மருத்துவப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவிற்கு கமல் விற்றுவிட்டார்” என விமர்சித்தார். பிரதமர் தொடர்ச்சியாக தமிழ்நாடு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், “முதலமைச்சர் ஸ்டாலின் எந்த கிராமத்திற்கும் செல்வதில்லை.
ஸ்பெயின், லண்டன், துபாய் என வெளிநாடுகளுக்குத்தான் செல்கிறார். கிராமத்திற்கு வந்து மக்களை அவர் சந்திப்பதில்லை. நேற்று பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பத்திரிகை நண்பர்கள், கட்சி ஐடி பிரிவு நிர்வாகிகளை தாக்கியதோடு உபகரணங்களையும் உடைத்துள்ளனர். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நீர் ஆதாரத்தை உயர்த்துவோம்: மற்றவர்களை தாக்குவது தான் கண்டிக்கத்தக்கது. பல்லடம், சூலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. விசைத்தறி தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு பாஜக தீர்வுகளைக் கொடுத்துள்ளது. ஆனைமலை நல்லாறு திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், பவர் டெக்ஸ் திட்டம் ஆகியவை அமல்படுத்தப்படும் என கூறியுள்ளோம்.