தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவராமன் மரணம்; சந்தேகம் கிளப்பும் அதிமுக, பாஜக.. சந்தேகமே இல்லை என ஆணித்தரமாக நிற்கும் நாதக! - Sivaraman death issue

Sivaraman death: சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, சீமான், அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி, சீமான், அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 11:00 PM IST

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அதேநேரம், அவரது தந்தை மதுபோதையில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். சிவராமன் மற்றும் அவரது தந்தையும் அடுத்தடுத்து பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெலியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், அவரது தந்தை அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன.

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், எலி மருந்து சாப்பிட்டதால் இன்று காலை உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில் சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற சிவராமன் எலி மருந்து தின்றதால் மரணமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறதோ என்ற கேள்வி வலுப்படுகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, முழுமையான விசாரணை நடத்தி, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், “பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இல்லை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சீமானுக்கு வருத்தக் கடிதம் எழுதிய சிவராமன்.. மரணத்தில் என்ன சொல்கிறது நாதக?

ABOUT THE AUTHOR

...view details