கோயம்புத்தூர்: வட கோவையில் உள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் 'Modi 3.0' என்ற பெயரில் பாஜக தன்னார்வலர்களுக்கான நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு நாளை (ஜூலை 23) முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் இருக்கும் என்பது எங்களது நம்பிக்கை. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பும் வரி விதிப்புகள் இருந்தன. வரும் காலத்தில் வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மற்ற மாநில மின் கட்டணத்துடன் ஒப்பிடுவது முட்டாள்தனமான செயல். திமுக வாக்குறுதியான மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவதை நிறைவேற்றவில்லை. இரண்டு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் செலுத்துவதால் கட்டணம் அதிகமாகிறது. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை நிறைவேற்றினால் ஒவ்வொருவருக்கும் 6 ஆயிரம் ரூபாய் சேமிப்பு கிடைக்கும். மின் கட்டண உயர்வால் தொழில் வளர்ச்சிக்குத் தேக்க நிலையை உருவாக்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "தமிழகத்தில் 15 முதல் 29 வயதுள்ள 17.5 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு அந்நிய நேரடி முதலீடு குறைவாக வந்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் செல்லவில்லை. கைது நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சனை நீட் தேர்வில் இல்லை. NTA அமைப்பில்தான் பிரச்சனை உள்ளது. NTA-வின் தலைவர் மாற்றப்பட்டுள்ளார். இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாது என்று நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.
இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்க உள்ளதாக பரவிவரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் துணை முதலமைச்சராக நியமிக்கலாம். அதற்கு முதலமைச்சருக்கு அருகதை உள்ளது. அப்படி முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்கும்போது திமுக எப்படிப்பட்ட கட்சி என்பதை மக்கள் தெரிந்துகொள்வார்கள். இதனால் திமுகவில் உள்ள சீனியர்கள் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மட்டும்தான் என்பதும் நிரூபணமாகும்" என்று அண்ணாமலை பதிலளித்தார்.
இதனை அடுத்து, திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர் என அமைச்சர் ரகுபதி கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பாஜக எல்லா கடவுளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும். போன வாரம் காமராஜர் ஆட்சி, இந்த வாரம் ராமர் ஆட்சி என்கிறார்கள். ராமருக்கு செருப்பு மாலை போட்டவர்களின் இயக்கத்தில் இருந்து வந்த கட்சியின் பிரதிநிதியான அமைச்சர் ரகுபதி, திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர் என சொன்னது, அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:பா.ரஞ்சித்தா..? அப்படின்னா யாரு? குறுக்கிட்ட மேயர் பிரியா.. சேகர்பாபு அளித்த பதில்!