திருச்சி:இந்திய ஜனநாயக கட்சி சார்பில் 'தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்' மாநில மாநாடு திருச்சி சிறுகனூர் பகுதியில் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்த நிலையில், அக்கட்சி நிறுவனத் தலைவர் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் சிறப்புரை ஆற்றினார்.
இதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். இம்மாநாட்டில் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், "நாய்களை பயன்படுத்தி வேட்டையாடும் காட்டு நாயக்கர் இன மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஜக்கம்மாளை வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அந்த சமுதாய மக்களை அழைத்துச் சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தேன். அதன் பேரில், நாய்களும், முயலும் வனவிலங்கு பட்டியலில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்பட்டது. வேட்டி கட்டிய தமிழன் இந்த நாட்டை ஆளமாட்டானா? என்று பல ஆண்டு காலமாக பலரும் பேசி வருகின்றனர். அது விரைவில் நடக்கத்தான் போகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவரை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்து வந்தோம். அப்போது இருவரும், பெற்ற தாயைப் பற்றி தான் அதிகம் பேசினோம். அப்போது, நீங்கள் ஆறு மாதத்தில் பிரதமராக வருவீர்கள் என்றேன். மோடிக்கு அந்த தகுதியும் இருந்தது. தமிழகத்தின் செங்கோளை நாடாளுமன்றத்தில் நிறுவியதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவருக்கு கடமைப்பட்டு உள்ளோம்.
பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பெண் கொடுத்து, அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்தால், பாரிவேந்தர் முதன்மையானவராக இருப்பார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு, பதினேழரைக் கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி கொடுத்தது.