மயிலாடுதுறை: "என் மண் என் மக்கள்" யாத்திரையின் ஒருபகுதியாக இன்று (ஜன.24) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். முதற்கட்டமாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் யாத்திரை மேற்கொண்ட அவர், பின்னர் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி செம்பனார்கோவிலில் 153வது தொகுதியாக அவர் யாத்திரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, 'இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஏன் பிரதமராக வரவேண்டும்..? தமிழகத்தில் 32 மாதங்களாக ஆட்சி செய்து வரும் திமுகவை ஏன் தூக்கி எறிய வேண்டும்.. என்பதை விளக்குவதற்காகவே இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளேன். 'சனாதான தர்மத்தை ஒழிப்போம்' என்று பேசிய அறநிலையத்துறை அமைச்சர் அறுபதாம் கல்யாணம் செய்து கொண்டது இந்த பூம்புகார் தொகுதியில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தான். எப்படி சனாதன தர்மத்தை ஒழிக்கிறார்கள் பாருங்கள்.
மோடி மீண்டும் பிரதமர் ஆவார்: 496 ஆண்டுகளுக்குப் பிறகு 142 கோடி இந்திய மக்களின் சார்பாக குழந்தை ராமரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் நிறுவியுள்ளார். இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்கள் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. மோடி தமிழகத்திலும் குடும்ப அரசியல், லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய வேண்டும். அதன் சாட்சியாக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியில் அமர்வார். கடந்த இரண்டு முறை போன்று இல்லாமல் விதிவிலக்காக தமிழகத்திலும் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட்ட 'செங்கோல்' மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தால் அனுப்பப்பட்டதாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வந்த பட்டண பிரவேச நிகழ்வுக்கு திமுக ஆட்சியில், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று அதற்கு தடை விதித்தனர். தருமபுரம் ஆதீனத்தில் அந்த பட்டணப்பிரவேசத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டியது, பாஜக. மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த கம்பர் ஸ்ரீரங்கத்தில் அமர்ந்துதான் கம்பராமாயணத்தை பாடினார் என்பதை கேட்டறிந்த நரேந்திர மோடி, ஸ்ரீரங்கம் கம்பர் மண்டபத்தில் அமர்ந்து அரை மணி நேரம் கம்பராமாயணத்தை கேட்டார்.