திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டந்தோறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 190 வது தொகுதியாக இன்று (பிப்.09) யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 191-வது தொகுதியாக திருவள்ளூருக்கு வந்த அவருக்கு சிவிஎன் சாலையில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து காமராஜர் சிலை வழியாக, ஜே.என்.சாலை, ராஜாஜி சாலை, தேரடி சாலை, பஜார் வீதி வரை யாத்திரையாகச் சென்ற அண்ணாமலைக்கு சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யாத்திரை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கடந்த 67 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மருத்துவ படிப்புக்கான இடம் 57 ஆயிரத்தில் இருந்து, 1 லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். 3-வது முறையாக மோடி ஆட்சியில் அமருவார்.
இந்தியாவில் மு.க.ஸ்டாலின் பகுதிநேர முதலமைச்சர். கேட்க வேண்டிய கேள்வி மற்றும் பேச வேண்டிய விசயத்தையும் துண்டு சீட்டில் முதல்வர் பார்த்துப் படிக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் உள்ளது. சமூக நீதி பாதுகாப்பு படுதோல்வி அடைந்துள்ளது" என்று குற்றம்சாட்டினார்.