வேலூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 87-வது நாளாக "என் மண் என் மக்கள்" நடை பயணம் மூலம் பாஜக அரசின் சாதனைகளை மக்களிடையே விளக்கி வருகிறார். அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று (பிப்.4) நடைபயணம் மேற்கொண்டார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அண்ணாமலை, "பேரறிஞர் அண்ணா நினைவு நாளை பல்வேறு கட்சியினரும் அனுசரிக்கும் இந்நேரத்தில், தனக்குப் பிறகு தன் வாரிசு யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற அவரது தீவிர கொள்கைக்கு நேர் எதிரான ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதனை மக்கள் மறந்துவிடக் கூடாது.
மேலும், சாராய கடை வருவாய் தொழுநோயாளியின் கையில் பெறும் வெண்ணெயைப் போன்றது என்று கூறிய பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, மதுக்கடைகளை திறந்து வைத்தார். தற்போது அது வளர்ந்து கடந்தாண்டு ரூ.44 ஆயிரம் கோடியாகவும், தற்போது ரூ.52 ஆயிரம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.
அண்ணா மறைந்தபோது, அவர் பற்றி தவறாக பேசி விட்டதாகக் கூறி, நாட்டில் சனாதன தர்மத்தை வளர்த்த கிருபானந்த வாரியார் பூஜை அறையில் திமுகவினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவரது இல்லம் தேடிச்சென்று ஆசி வழங்கினார், கிருபானந்த வாரியார்.