சென்னை:சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் அவரச நிலை பிரகடனம் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது பேசிய அவர், பிப்ரவரி 14 என்ன நாள் என்பது இளைஞர்கள் அனைவருக்கும் தெரியும் எனவும், ஆனால் எமர்ஜென்சி எப்பொழுது கொண்டுவரப்பட்டது, ஏன் கொண்டு வரப்பட்டது என கேட்டால் எவருக்கும் தெரியாது என தெரிவித்தார்.
மேடையில் பேசிய அண்ணாமலை வீடியோ (credits-ETV Bharat Tamil Nadu) அதை தமிழகத்தில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும், அதற்கு பாஜக தற்போது ஒரு முன்னெடுப்பு எடுத்துள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைப் பார்த்து இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவதாகவும், அரசியல் சாசனம் குறித்து பேச காங்கிரஸுக்கு அருகதையே இல்லை எனவும் தெரிவித்தார்.
நேரு குடும்பம் இந்தியாவில் இருந்து வெளியேற்றி இருந்தால் இந்தியாவின் வளர்ச்சி மேலோங்கி இருந்திருக்கும் என தெரிவித்தார். 1971ஆம் ஆண்டு 14 தனியார் வங்கிகளை ஒரே இரவில் பொதுவுடமை ஆக்கியவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என குற்றம் சாட்டினார்.
இந்தியா என்பது இந்திரா காந்திக்கு சேவை செய்வதற்காக மட்டுமே இருந்துள்ளதாக கூறினார். அரசியலமைப்புச் சட்டம் குறித்து பேசும் அவர்கள் தான் அதிக அளவில் அரசியல் சட்டத்தை திருத்தங்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, வெறும் 8 முறை மட்டுமே சட்டத் திருத்தங்களை மக்கள் நலனுக்காக கொண்டு வந்துள்ளதாக கூறினார். இந்த முறை 21 கட்சிகள் இணைத்து 230 தொகுதிகளில் மட்டும்தான் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், பாஜக இந்த தேர்தலில் தனியாக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்!