அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சென்னை:எம்.இ,(M.E) எம்.டெக்,(M.Tech) எம்.ஆர்க்,(M.Arch) எம்.பிளான்(M.Plan) ஆகிய முதுகலைப் பொறியியல் படிப்பில் நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
2024 -25ஆம் கல்வியாண்டிற்கான படிப்பில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு, முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் கடந்த ஜன.10ஆம் தேதி முதல் பிப்.12ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றது.
எம்.சி.ஏ படிப்பிற்கு 9 ஆயிரத்து 206 பேரும், எம்.பி.ஏ படிப்பிற்கு 24 ஆயிரத்து 814 பேரும், எம்.டெக், எம் ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 5 ஆயிரத்து 281 பேரும் விண்ணப்பம் செய்தனர்.
எம்.சி.ஏ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குக் கடந்த மார்ச்.9ஆம் தேதி காலையிலும், எம்.பி.ஏ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 9ஆம் தேதி பிற்பகலிலும், முதுநிலை பொறியியல் நுழைவுத்தேர்வு கடந்த மார்ச் 10ஆம் தேதியும் தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, முதுகலைப் பொறியியல் படிப்பில், கேட் நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் கடந்த ஏப்.15ஆம் தேதி முதல் மே.14 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவற்றில் முதுகலை பொறியியல் படிப்பான எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகியவற்றில் 2448 இடங்கள் உள்ளது.
முதுகலை பொறியியல் படிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "முதுகலை பொறியியல் படிப்பில் சேர்வதற்குக் கேட் தேர்வு, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு ஆகியவற்றில் உள்ள இடங்களுக்குத் தனித்தனியாகச் சேர்க்கை நடத்தப்படும். சீட்டா தேர்வின் மூலம் சேர்வதற்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
கடந்தாண்டுகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை தாமதமாக ஆரம்பித்ததால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டு வந்தது. நல்ல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்காது. காரணம் நல்ல கல்லூரியைப் பார்த்துப் பயப்படும் மாணவர்கள் விண்ணப்பம் செய்தால் இடம் கிடைக்காது என நினைக்கின்றனர்.
ஆனால், இடம் காலியாகத்தான் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் சில பிரிவுகளிலும் இடம் காலியாக இருக்கிறது. அதற்கு மாணவர்கள் இங்கு இடம் கிடைக்காது என நினைத்து சிறிய கல்லூரியில் சென்று நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்கின்றனர்.
இதனால் நல்ல கல்லூரியில் சேர்க்கை இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முன்கூட்டியே ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை துவக்கப்படவுள்ளது.
முதுகலைப் படிப்பில் இணைப்பு பெற்ற கல்லூரியில் உள்ள இடங்களை தற்பொழுது மாணவர் சேர்க்கையில் சேர்க்க வில்லை. அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரியின் இடங்களை மட்டுமே சேர்த்துள்ளோம்.
தற்பொழுது 4648 விண்ணப்பம் வந்துள்ளது. கல்லூரியில் 2448 இடங்கள் உள்ளது. மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். கேட் தேர்வின் மூலம் சேர்வதற்கு விண்ணப்பம் செய்வது குறைவாகவே உள்ளது. முன்னர், கேட் மாணவர்கள் அதிகம் சேர்வார்கள். தற்பொழுது ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்ந்து வருகின்றனர். முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டதால் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இளங்கலைப் படிப்பினை முடித்தவுடன் மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைக் கிடைப்பதால், தனியார் நிறுவனங்கள் திறமையான மாணவர்களைத் தேர்வு செய்து வேலைக்கு எடுத்துச் செல்கின்றனர். அதற்குக் கீழே உள்ள மாணவர்கள் தங்களால் முதுகலை பொறியியல் படிப்பினைப் படிக்க முடியாது என நினைப்பதும் சரியானது தான்.
அதிலும், சிலர் தான் முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்யவும், ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டும் என விரும்புவர். அது போன்று உள்ளவர்கள் தான் முதுகலைப் பொறியியல் படிப்பிற்கு வருகின்றனர். வேலைக்குச் சென்ற பின்னர் சிலர் பணியின் நேரம் பிடிக்காமலும், ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்பி வருகின்றனர். அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட பிரிவில் படிக்க வருகின்றனர்.
முதுகலைப் பொறியியல் படித்தால் கம்ப்யூட்டர் துறையில் மட்டும் தான் ஆசிரியர்கள் பணிக்குத் தேவையாக இருக்கின்றனர். மற்றப் பிரிவுகளில் அதிகமாக இருக்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் புதியதாக ஆசிரியர் பணி கிடையாது.
எனவே, இந்தப் பிரிவுகளில் எம்.இ சேர்க்கையும் குறைந்து விட்டது. முதுகலைப் பொறியியல் படிப்பில் உள்ள 2500 இடங்களில் 1200 இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியில் தான் இருக்கிறது. குறிப்பிட்ட கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தான் மாணவர்கள் அதிகம் சேருகின்றனர். மற்றப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோட் படத்தில் விஜயுடன் நடிக்க மறுத்த குண்டூர் காரம் நடிகை ஸ்ரீ லீலா! என்ன காரணம் தெரியுமா? - Actress Sreleela Rejects Goat Movie