சென்னை: 2024 - 25ஆம் கல்வியாண்டில் பிஇ (BE), பிடெக் (B.Tech) பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வமுடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர். மே 6 முதல் 22ஆம் தேதி வரையில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 376 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1 லட்சத்து 42 ஆயிரத்து 867 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 3 ஆயிரத்து 320 மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் ஜூன் 6ஆம் தேதி வரையில் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் சான்றிதழ்களை ஜூன் 13 முதல் 30ஆம் தேதி வரையில் சரிபார்க்க முடியும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-ல் வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு முன்னர் கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியாதாவது, “நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கு மாணவர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் அவர்களின் திறமையை தெரிந்து கொள்ள வேண்டும்.
பொறியியல் படிப்பதற்கு கணிதத்தில் அதிகமாக மதிப்பெண் இருக்க வேண்டும். கணிதம் பாடத்தை ஆர்வமாக படித்து, 12ஆம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனரா என்பதை பார்க்க வேண்டும். தாவரவியல், வரலாறு பாடங்களை விரும்பி படிக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து சிரமப்படுவார்கள்.
மாணவர்கள் விருப்பம்: பள்ளியில் படிக்கும் போதே விரும்பி படித்தால் தான் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பார்கள். வீட்டில் பெற்றோர் கூறுவதால் பொறியியல் படிப்பில் சேர்ந்து சிரமப்படுகின்றனர். எனவே, மாணவர்களுக்கு விருப்பம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு கல்லூரியில் சேர வேண்டும்.
கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்வது?மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு கலந்தாய்விற்கு விண்ணப்பம் செய்திருப்பார்கள். அதில், பண வசதி உள்ளவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் நல்ல கல்லூரியில் சேர்க்கின்றனர். கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் சுமார் 40 கல்லூரிகளில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வகையில் சிறப்பான கல்லூரிகள் உள்ளன. மாநிலத்தில் சில கல்லூரிகளில் தரமான கல்வி அளிக்கப்பட்டு, 90 சதவீதம் வேலைக்கும், உயர்கல்விக்கும் வழிவகுக்கிறது.