சென்னை: ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதையெல்லாம் பார்க்கின்ற பொழுது ஆளுங்கட்சியை சேர்ந்தவரை தப்பிக்க வைக்க இந்த காவல்துறை செயல்படுகிறது என்ற அச்சம் மக்களுக்கு ஏற்படுகிறது. நடுநிலையோடு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சார் என அழைக்கப்பட்டவர் யார்?: அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொது செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டையே உலுக்க கூடிய அதிர்ச்சியான சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்திருக்கிறது. இந்திய அளவில் மிகச்சிறந்த கல்வி நிலையமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் என்று சொன்னால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலக அளவில் புகழ்மிக்க பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் 23ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் நுழைந்த ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக மாணவர், மாணவி இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது மாணவனை அடித்து உதைத்து விட்டு, அங்கிருந்து மாணவியை பலாத்காரமாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார்.அதோடு பாலியல் வன்கொடுமை செய்கின்ற செயல்பாட்டினை அவருடைய செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். அந்த நேரத்தில் ஞானசேகருக்கு செல்போன் அழைப்பு வந்ததாகவும் அவர் ஒருவரிடம் சார், சார் என்று பேசியதாகவும் அந்த மாணவி புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
அந்த சார் யார் என்பதை இதுவரை போலீசார் வெளிப்படுத்தவில்லை. அந்த மாணவி இது குறித்து காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். அந்த புகாரில் இதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..ஆனால் காவல் உயர் அதிகாரி அளித்த பேட்டியில், 'பாலியல் வன்கொடுமை செய்தது ஒருவர்தான். அவர் ஞானசேகரன் மட்டும் தான்,' என்று சொல்கிறார். ஞானசேகரன் சரித்திர பதிவேடு குற்றவாளி அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி எப்படி தங்கு தடை இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாட முடியும்? அதை எப்படி அனுமதித்தார்கள்.
அமைச்சர்களோடு ஞானசேகர் இருப்பதாக புகைப்படம் வந்திருக்கிறது..அதற்கு அமைச்சர் பல்வேறு காரணங்களை சொல்கிறார்.. திமுகவில் அந்த நபர் பொறுப்பில் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்தவுடன் அவர் பெயர் உள்ள விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் எல்லாம் அகற்றப்படுவதாக செய்திகள் வருகிறது..
மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ள ஞானசேகரன், சார் என்று அழைத்த நபர் யார் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் மறைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் ஞானசேகரன் எப்படி அடிக்கடி சுற்றி திரிந்து இருக்க முடியும்? எந்த பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில்தான் மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?
முரண்பட்ட கருத்து:இந்த சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர் அச்சப்படுகிறார்கள். அரசை நம்பித்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அண்ணா பல்கலைத்தில் படிக்க அனுப்புகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 70 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் 56 சிசிடி கேமராக்கள் மட்டுமே வேலை செய்வதாகவும் செய்தி வருகிறது. மற்றவை ஏன் இயங்கவில்லை? ஒரு வெக்ககேடான செயல்.