சென்னை:ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில், தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், “கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தேசிய அளவிலான உயர்கல்வி மாணவர் சேர்க்கையைவிட, தமிழ்நாட்டில் 52 சதவீதமாக உள்ளது. இதற்கு காரணம் காமராஜர் காலத்தில் அதிகளவில் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டது. தமிழ்நாடு கல்வியில் முன்னணியில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம்.
மாணவர்களிடமும் நிச்சயம் திறமை இருக்கும். அவர்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து அவற்றை வளர்க்க ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும். ஒரு மாணவனின் திறனை வளர்த்தெடுப்பதில், கல்லூரி பேராசிரியர்களை விட பள்ளி ஆசிரியர்களுக்கு தான் பங்கு அதிகம். குறிப்பாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
எனவே, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை யுபிஎஸ்சி தேர்வு போன்று சிறந்த தேர்வுகளை வைத்து, தேர்வு செய்து எடுக்க வேண்டும். அப்போது இந்த நாடு கல்வியல் மிகச்சிறந்த நாடாக முன்னேறும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. மாணவர்களுக்கு நற்பண்புகளை பள்ளியிலேயே வளர்த்து விட வேண்டும் ,கல்லூரிக்கு வந்த பிறகு அந்த மாணவர்களை மாற்றுவது மிகவும் சிரமமாக உள்ளது.