புதுடெல்லி:சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) வெளியான நிலையில் அதற்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காவல்துறையினர் மீது துறைரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மேல்முறைடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், "காவல்துறை அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கவனக்குறைவு நேரிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தவறாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த இரண்டு நாட்களில் அது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் பொதுவெளியில் செய்தியாளர்களிடம் முக்கியமான சில தகவல்களை கூறியது குறித்த நீதிமன்ற விமர்சனமும் தேவையில்லாத ஒன்றாகும்.
இணையதளத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே எஃப்ஐஆர் வெளியானது. அது குறித்து தேசிய தகவல் மையம் அனுப்பிய மின்னஞ்சலையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. தேசிய தகவல் மையம் மேற்கொண்ட விசாரணையில்,தொடர்புடைய வழக்கின் எஃப்ஐஆரை பதிவிறக்கம் செய்வதில் இருந்து தடுப்பதற்கான தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து மின்னஞ்சலிலும் தேசிய தகவல் மையம் சார்பில் மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் சிலரால் எஃப்ஐஆரை பார்க்க முடிந்திருக்கிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அமைத்துள்ள மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அல்லது பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியதற்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தெரிவித்த சில கருத்துகள் அடங்கிய குறிப்புகள், செய்தியாளர் சந்திப்பு குறித்து உயர் நீதிமன்றம் கூறிய கருத்துக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டிருந்தது.
விமர்சனங்களுக்கு தடை:இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து எஃப்ஐஆர் வெளியானது தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக உயர் நீதிமன்றம் கூறிய விமர்சனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
விசாரணையின் போது, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததற்காக கோபப்படுகிறீர்களா?" என்று கேட்டனர். அதற்கு ரோஹத்கி, "இல்லை, நான் பாதிக்கப்பட்ட தரப்புக்கே ஆதரவு தெரிவிக்கின்றேன். சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாதுகாப்புக்கு எதிராக நான் கோபப்படவில்லை. இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் முன்வைத்த சில கருத்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றேன்,"என்றார்.