தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 11 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது.. அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை! - anna university

2023-2024ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்து, நடப்பாண்டில் புதிதாக 25 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
தமிழ்நாட்டில் 11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 3:00 PM IST

Updated : Mar 22, 2024, 4:24 PM IST

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2023-2024 ஆம் கல்வியாண்டில், 440 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதில், 5 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்ற 11 கல்லூரிகளுக்கு, நடப்பாண்டில் அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும், புதியதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science), டேட்டா சயின்ஸ் (Data science), ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence ), சைபர் செக்யூரிட்டி (Cyber Security) உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் 25 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கும் அனுமதி அளித்துள்ளது.

2023-2024 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில், பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு 446 கல்லூரிகளில், 2 லட்சத்து 7 ஆயிரத்து 996 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது. அதில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் சிறப்பு, பொதுக் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு ஆகியவற்றின் மூலம் 1 லட்சத்து 650 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டது. இதில், 53 ஆயிரத்து 628 இடங்கள் காலியாக இருந்தன.

பொறியியல் கல்லூரி எண்ணிக்கை மாணவர்கள் சேர்க்கை
13 கல்லூரிகள் 100 சதவிகிதம்
56 கல்லூரிகள் 95 சதவிகிதம்
75 கல்லூரிகள் 90 சதவிகிதம்
164 கல்லூரிகள் 75 சதவிகிதம்
16 கல்லூரிகள் 1 சதவிகிதம்
28 கல்லூரிகள் 5 சதவிகிதம்
48 கல்லூரிகள் 10 சதவிகிதம்
80 கல்லூரிகள் 25 சதவிகிதம்

இதில், 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேராத அவலநிலை இருந்துள்ளது. இதனால், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தீர்மானம்:அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், 10 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள கல்லூரிகளுக்கு, நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்காமல் இருப்பதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாமல், 5 சதவீதத்திற்கு கீழ் மாணவர்கள் சேர்க்கை உள்ள 11 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களை, வேறு கல்லூரியில் சேர்க்கவும், தொழில்நுட்ப கல்வி இயக்கம் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2024-2025 ஆம் கல்வியாண்டு:இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில், 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் ஜனவரி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை பெறப்பட்டுள்ளது.

மேலும், 2023-2024ஆம் கல்வியாண்டில், 25 சதவிகிதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றை மேற்காெள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, 2024-2025ஆம் கல்வியாண்டில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (SAP), மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் 16, மத்திய அரசின் கல்லூரிகள் 5, தமிழ்நாடு அரசின் கல்லூரிகள் 11, அரசு உதவி பெறும் 3 பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 393 என மொத்தம் 429 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரிகளில் கடந்தாண்டு மாணவர்கள் சேர்க்கையில் 25 சதவீதத்திற்கும் குறைவாக நடைபெற்ற 70 கல்லூரிகளும் உள்ளன. நடப்பாண்டில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும், கம்ப்யூட்டர் சார்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI ), சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த பாடப்பிரிவுகளில், ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், 25 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:100 நாள் வேலை திட்டத்தில் ரூ.450 சம்பளம், மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! - AIADMK Election Manifesto

Last Updated : Mar 22, 2024, 4:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details