திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசை கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) கடந்த 2002ஆம் ஆண்டு அங்கன்வாடி துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மசோதாவை இயற்றிய மத்திய அரசை கண்டித்து அன்று முதல் இன்று வரை ஜூலை 10ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற துறை பணிகளில் அங்கன்வாடி பணியாளர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு உள்ளூர், வெளியூர் பணியிட மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்கள் மீது அதிகாரிகள் தரக்குறைவான வார்த்தைகளை உமிழ்வதை தவிர்க்க வேண்டும், அங்கன்வாடி உதவியாளர் சத்தியவாணி மாற்றுத்திறனாளி என்ற காரணம் காட்டி ஏளனம் செய்யப்பட்டதால் மனமுடைந்தவர் தற்கொலை செய்ய முயன்றதற்கு காரணமான ஒருங்கிணைப்பாளர் பிரீத்தாவின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைதொர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அங்கன்வாடி ஊழியர், "2002இல் இந்நாளில் அங்கன்வாடி துறையை தனியாருக்கு வழங்கப்பட்ட மசோதா இயற்றப்பட்டதால் இன்று கருப்பு தினமாக அனுசரிக்கிறோம். மேலும் சில கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளோம். அதில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து 25 ஆயிரமும், உதவியாளருக்கு 18 ஆயிரமும் ஊதியம் வழங்க வேண்டும். பனிக்கொடையாக 10 லட்சம் அல்லது 5 லட்சம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
இந்நிலையில் அங்கன்வாடி உதவியாளர் சத்தியவாணி தற்கொலை செய்ய முயன்றது குறித்து திட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் பிரீத்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கன்வாடிக்கு குழந்தைகள் வருகை குறைவாக உள்ளது எனக்கூறி அங்கன்வாடி ஊழியர்களுக்கு மெமோ வழங்குவது, சம்பளம் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை குளங்கள் ஆக்கிரமிப்பு; தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - Tiruvannamalai ponds encroachment