சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சேலம் விமான நிலையத்தை விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த இந்த விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டப்படும் தாமதமும், அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை. சேலம் கமலாபுரத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விமானநிலையம் கடந்த 30 ஆண்டுகளில் எட்டியுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். தொடக்கத்தில் பயணிக்க ஆளில்லாததால், தங்களின் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் மறுத்த நிலை மாறி, இப்போது சென்னை, ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: இந்த நகரங்கள் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கும் நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. ஆனால், அதை சாத்தியமாக்கும் வகையில் சேலம் விமான நிலையம் தான் இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை. அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. 2009 - 2009ஆம் ஆண்டில் அப்போதைய திமுக ஆட்சியிலும், 2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியிலும் சேலம் விமான நிலையத்தை விரிவாக்குவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிலங்களை கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க:"தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரிவருவாய் தமிழகத்திற்கே" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஆனால், நிலங்களை கையகப்படுத்த மக்களின் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. நீண்ட இழுபறிக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் வகையில் 654 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது. விமான நிலையத்திற்கான நிலங்களைக் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக திட்டமிட்டு ஒரு பரப்புரை செய்யப்படுகிறது. உண்மையில், நிலங்களை கையகப்படுத்த எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
குறைவான இழப்பீடு?:மாறாக, 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலத்திற்கான சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தான் விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள். சேலம் விமான நிலையத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ள பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.80 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை விற்பனையாகும் நிலையில் அதற்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படுவதை விவசாயிகள் ஏற்க மறுக்கிறார்கள்.