தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அணை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி! - Mekedatu Dam Issue

Mekedatu Dam Issue: நல்ல வழியிலோ அல்லது மோசடி வழியிலோ மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Mekedatu Dam Issue
Mekedatu Dam Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 5:03 PM IST

சென்னை: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம். அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்குக் காவிரி நீரை வழங்குவோம்” என்று கர்நாடகத் துணை முதலமைச்சரும், அம்மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருந்த நிலையில், இது குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடகத் துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையைக் கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி.

ஆனாலும் கூட, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதைத் தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மௌவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருப்பதை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையைக் கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது.

திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை. மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்.

அதனை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடகக் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தருமபுரி மக்களவைத் தொகுதி; சுழற்சி முறையில் நான்கடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

ABOUT THE AUTHOR

...view details