சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் விவேகானந்தர் அரங்கில் 2 நாட்கள் நடைபெற உள்ள இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, செஞ்சி மஸ்தாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு துவக்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, மாநாட்டில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கல்வி நிறுவனங்களில் தமிழ் என்று சொல்லும் போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பணிகளில் சேர தகுதி வாய்ந்த, பள்ளி படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது என்று கூறினார். அனைத்து பள்ளியிலும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட வைத்தார்.
தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு நடத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1500 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். தமிழ் மொழிப் பெயர்ப்பு செய்ய ரூ.3 கோடி வரை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். தமிழில் உள்ள பெருமைகளை உலகம் முழுதும் கொண்டு செல்ல, பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தி பல மொழிகளில், பல நாடுகள் மொழி பெயர்ப்பு செய்ய ஒப்புதல் அளித்து தமிழின் பெருமையை கொண்டு சேர்க்க செயல்பட்டு வருகிறோம்.