தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் அருகே கவிழ்ந்து தீ பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. ஒருவர் பலி.. உயிர் தப்பிய பயணிகள்..! - SALEM OMNI BUS ACCIDENT

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தின் காரணமாக முன்னாள் சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீ பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து
தீ பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 10:50 AM IST

சென்னை: சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தின் காரணமாக முன்னாள் சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதிய ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து கோவை நோக்கி ஆம்னி பேருந்து நேற்றிரவு 10.20 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 25 பயணிகளுடன் புறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க:கோயில் பூசாரி மீது பாய்ந்த போக்சோ; 17 வயது மாணவி கர்ப்பம்!

இதில் காயம் அடைந்த பயணிகள் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது சில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சங்ககிரி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

ஆனால், பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த சின்னாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்துக் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து கவிழ்ந்ததும் லேசான காயம் அடைந்த பயணிகள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தின் காரணமாக சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு அப்பகுதியில் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details