கோயம்புத்தூர்: கோவை மாநகர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்த போது 15 வயதில் அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் இல்லத்தில் இருந்து 37 ரூபாய் 50 பைசாவை திருடியுள்ளார். அது பற்றி மூதாட்டி வினவும் போது தெரியாது எனவும் கூறியிருக்கிறார்.
இதன் பின்னர், இவரது குடும்பம் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்து பல்வேறு தொழில்களை செய்து தற்போது ரஞ்சித் ரத்தினபுரி பகுதியில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தான் திருடிய மூதாட்டியின் 3 வாரிசுகளின் குடும்பத்தையும் இலங்கைக்கு சென்று நேரில் சந்தித்து தலா 70 ஆயிரம் ரூபாய் என 2.10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
முதியவர் ரஞ்சித் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இது குறித்து ரஞ்சித் கூறுகையில், "17 வயது வரை இலங்கையில் வசித்து வந்தோம். அப்போது ஒரு பாட்டியின் 37 ரூபாய் 50 பைசா பணத்தை திருடியிருந்தேன். பின்னர், தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்து விட்டோம். இதனை அடுத்து என் வாழ்க்கையில் நான் வாங்கிய கடன், திருடிய பணம் போன்றவற்றை ஊறியவர்களிடம் திரும்பி தர எண்ணினேன்.
அதன் அடிப்படையில், வங்கியில் நான் வாங்கிய கடன், 25 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் துணி வாங்கிவிட்டு தராமல் வந்த பணம், சாப்பிட்டு விட்டு தராமல் வந்த பணம் உட்பட பல்வேறு இடங்களில் நான் செலுத்தாமல் இருந்த பணத்தை எல்லாம் தற்போது செலுத்தி விட்டேன்.
முதியவர் ரஞ்சித்திடம் 37 ரூபாய் 50 பைசாவை தொலைத்த பாட்டி மற்றும் அவரது கணவர் (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:போலி கணக்கு எழுதி லட்சக்கணக்கில் கையாடல் செய்த பெண் கணக்காளர்! சிக்கியது எப்படி?
மேலும், சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றையெல்லாம் பார்த்த போது அந்த பாட்டியிடம் திருடிய பணத்தை திருப்பி தர வேண்டுமென நினைத்தேன். தொடர்ந்து இலங்கையில் உள்ள எனது நண்பர்களை எல்லாம் தொடர்பு கொண்டு, பிறகு அந்த பாட்டியின் வாரிசுகள் மற்றும் குடும்பங்களை சந்தித்தேன்.
அதன்படி, அவர்களுக்கு 3 வாரிசுகள், அவர்கள் அனைவருக்கும் தலா 70 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தாடைகள் ஆகியவற்றை எல்லாம் அளித்து, நான் செய்த தவறை ஒப்பு கொண்டேன். அந்த குடும்பத்தினரும் இதனால் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதன் காரணமாக தற்போது, அவர்கள் என்னுடைய உறவுகள் ஆகிவிட்டார். அப்போது பாட்டியிடம் திருடிய பணத்தை நானும், எனது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டு செலவழித்தோம்" என தெரிவித்தார்.